உள்ளடக்கமான பொருளாதார வளர்ச்சி, பிராந்திய அபிவிருத்தி, தொழில் உருவாக்கம் மற்றும் வறுமை தணிப்பு போன்றவற்றுடன், இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறை அமைந்துள்ளது. துறையின் வளர்ச்சிக்கும், தேசிய நிகழ்ச்சிநிரலுக்கும் 25 வருடங்களுக்கு மேலாக ஆதரவளிக்கும் யூனியன் வங்கி, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறையின் மேம்படுத்தலுக்காக பரந்தளவு நிதித் தீர்வுகளையும், ஆலோசனை சேவைகளையும் வழங்குகின்றது. உற்பத்தி, வலு மற்றும் மின், போக்குவரத்து முதல் நிபுணத்துவ சேவைகள் வரை பரந்தளவு துறைகளின் அதிகரித்துச் செல்லும் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு யூனியன் வங்கியின் நிதித்தீர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும், விவசாயம், விவசாய-பதப்படுத்தல், உற்பத்தி, கடற்றொழில், சுற்றுலா, விலங்கு வேளாண்மை மற்றும் ஏற்றுமதி வியாபாரங்களுக்கு சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறை கடன் வசதியினூடாகவும் ஆதரவளிக்க யூனியன் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது.
யூனியன் வங்கியின் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வசதி என்பது, வியாபாரங்களின் நீண்ட கால நிலைபேறாண்மைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தொழிற்படு மூலதனத்துடன் நீண்ட கால முதலீட்டுக் கடன்கள் மற்றும் இணைந்த முதலீட்டுக் கடன்கள் ஆகிய நிதி வசதித் தெரிவுகள் வழங்கப்படுகின்றன. சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களுக்கு ரூ 50 மில்லியன் வரை மூலதன முதலீடுகளுக்கு இந்தத் திட்டத்தினூடாக ஆதரவளிக்கப்படுகின்றது. புதிய இயந்திரங்கள், சாதனங்கள் கொள்வனவு மற்றும் பொருத்தல்கள், தளபாடங்கள் மற்றும் பொருத்துகைகள் கொள்வனவு, கட்டடங்களின் மறுசீரமைப்புகள்/புதுப்பித்தல்கள் மற்றும் தொழிற்படு மூலதன நிதியளிப்புகளுக்கு இவை வழங்கப்படுகின்றன. 300க்கு குறைவான ஊழியர்களைக் கொண்ட, வருடாந்தம் 750 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த புரள்வைக் கொண்டுள்ள சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கு இந்த நிதிவசதிக்காக விண்ணப்பிக்க முடியும்.
பெண் தொழில்முயற்சியாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, யூனியன் வங்கியின் கடன் வசதியினூடாக, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு 10% மானியம் வழங்கப்படுகின்றது. வளர்ந்துவரும் இந்தத் துறையை நிலைபேறான வியாபாரங்களாக கட்டியெழுப்பிக் கொள்வதற்கு உதவுவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. பெண் தலைமைத்துவத்தில் இயங்கும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு குறிப்பிடத்தக்களவு நிதி வசதியை யூனியன் வங்கி ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளது. உயர் மட்ட நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்புடன் பல்வேறு ஆலோசனை வழங்கல் நடவடிக்கைகளை வங்கி முன்னெடுக்கின்றது. இந்த பயிற்சியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு, ஆரம்ப கடன் தொகையில் மேலும் 10% மானியத்தை அனுபவிக்கும் தகைமை வழங்கப்படும். ஊவா, சப்ரகமுவ மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு இந்த கடன் தொகை மீதான மேலதிக 5% மானியத்தை பெற்றுக் கொள்வதற்கான தகைமை வழங்கப்படுகின்றது. பயிற்சியைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு கடன் தொகையில் 25% வரை மானியமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் கொடுக்கல் வாங்கல் வங்கியியல் சிரேஷ்ட உப தலைவர், அசங்க ரன்ஹொட்டி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் நிலைபேறான வியாபாரங்களை கட்டியெழுப்பும் பயணத்தை மேற்கொண்டு, நீண்ட காலமாக இயங்கும் தொழில்முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில் யூனியன் வங்கியின் கடன் வசதி அமைந்துள்ளது. பெண் தொழில் முயற்சியாளர்கள் மீது வங்கி காண்பிக்கும் கவனத்தினூடாக, பெண்களுக்கு தமது தொழில்முயற்சியாண்மை கனவை தொடர்வதற்கு நிதி வசதியுடன் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், தமது வியாபார வளர்ச்சிக்கு அவசியமான அறிவு மற்றும் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு அவசியமான மேலதிக அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளவும் உதவியாக அமைந்துள்ளது.” என்றார்.
படம்: சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் கொடுக்கல் வாங்கல் வங்கியியல் சிரேஷ்ட உப தலைவர், அசங்க ரன்ஹொட்டி

