யூனியன் வங்கி வருடத்தின் முதல் பகுதியில் பதிவு செய்திருந்த உறுதியான ஆரம்பத்தை அடிப்படையாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் உறுதியான வளர்ச்சி வேகத்தை பேணியிருந்ததுடன், இலாபத்தன்மை, முதன்மை வருவாய் மற்றும் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றில் உறுதியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
வங்கியின் தொழிற்பாட்டுத் திறன் மற்றும் வருவாய் விரிவாக்கம் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் வரிக்கு முந்தைய இலாபம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 84% அதிகரித்து 881 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. வரிக்குப் பிந்தைய இலாபமானது வருடாந்த அடிப்படையில் 134% உயர்ந்து 587 மில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது. இது வங்கியின் முதலாவது காலாண்டுச் செயல்திறனைப் போன்று இருமடங்காக உயர்ந்துள்ளதுடன், அதன் நிலையான வருவாய்த்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.
ஆறு மாத காலப்பகுதியில் வங்கியின் முதன்மை வருமான இயக்கிகள் தொடர்ந்தும் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன. நிகர வட்டி வருமானம் 22% அதிகரித்து 3,148 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியமையினூடாக, மொத்த வருமானம் 19% உயர்ந்து 10,139 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது வங்கியின் முதன்மையான கடன் வழங்கல் மற்றும் திறைசேரி நடவடிக்கைகளின் நெகிழ்ச்சித்தன்மையைப் பிரதிபலிக்கின்றது. சில்லறை, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை (SME) மற்றும் கூட்டாண்மை வங்கி வணிகப் பிரிவுகளின் நிலையான பங்களிப்புகளின் காரணமாக, நிகரக் கட்டணம் மற்றும் தரகு வருமானம் 13% சீரான வளர்ச்சியை எய்தி 732 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. மொத்தமாக, தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான வருமானம் 58% எனும் கவர்ச்சிகரமான வளர்ச்சியைக் கண்டு 1,250 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் வங்கியின் துணை நிறுவனமான UB Finance PLC இல் வங்கி கொண்டிருந்த பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த 249 மில்லியன் ரூபாயும் உள்ளடங்குகின்றது. சந்தை ஊடுருவலை ஆதரிப்பதற்கும் வைப்புச் சேகரிப்பை விரைவுபடுத்துவதற்கும் ஏற்ப, தொழிற்பாட்டுச் செலவுகள் 9% என்ற கட்டுப்பாடான அளவில் மட்டுமே அதிகரித்துள்ளன.
வங்கியின் நிதிநிலை அறிக்கை தொடர்ந்து ஊக்கமளிக்கும் விரிவாக்கத்தைக் கண்டுள்ளதுடன், மொத்தச் சொத்துக்கள் 15% அதிகரித்து 199,283 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளன. வங்கியின் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர முயற்சிகளுக்கு கிடைத்த நேர்மறையான பிரதிபலிப்பாக, வாடிக்கையாளர் வைப்புகள் 10% உயர்ந்து 130,219 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளன. இது வங்கி மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மேலும் ஆழமடைந்துள்ளதை வெளிப்படுத்துகிறது. மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் வருடாந்த அடிப்படையில் 16% அதிகரித்து 136,742 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளதுடன், ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்ட வலுவான கடன் வழங்கல் வேகத்தையும் தக்கவைத்துள்ளது.
UB ஃபினான்ஸ் பிஎல்சி மற்றும் நஷனல் அஸட் மனேஜ்மென்ட் லிமிடெட் ஆகியவற்றை உள்ளடக்கிய குழும மட்டத்திலும் நிதிச் செயல்திறன் இவ்வாறு உறுதியாக அமைந்திருந்தது. குழுமத்தின் மொத்தச் சொத்துக்கள் 17% வளர்ச்சியடைந்ததுடன், குழுமத்தின் வரிக்கு முந்தைய இலாபம் 97% உயர்ந்து 997 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. வங்கியற்ற நிதிச் சேவைகள் மற்றும் சொத்து முகாமைத்துவ தொழில்துறைகளில் குழுமத்தின் வலுவான செயல்திறனை உறுதிப்படுத்தும் வகையில், குழுமத்தின் வரிக்குப் பிந்தைய இலாபம் 141% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டு 604 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் தவிசாளர் தினேஷ் வீரக்கொடி கருத்துத் தெரிவிக்கையில், “2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் எமது நிதிப் பெறுபேறுகளினூடாக யூனியன் வங்கியின் மாற்றியமைப்பு பயணத்தில் உறுதியான போக்கு பிரதிபலிக்கப்பட்டுள்ளது. எமது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் அனைத்துத் பங்காளிகளுக்கும் (stakeholders) நிலையான வளர்ச்சியை வழங்குவதற்கும், நீண்டகால மதிப்பினை உருவாக்குவதற்கும் நாங்கள் என்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” என்றார்.
பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “புதிய தீர்வுகள், சந்தைப்படுத்தல், விற்பனை முயற்சிகள் மற்றும் டிஜிட்டல் ஆற்றல்கள் ஆகியவற்றில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் மூலம் கிடைத்த சீரான பலன்களை முதலாவது அரையாண்டு நிதி முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இது 2026 ஆம் ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியிலும் இந்த வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வலுவான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்துள்ளது.” என்றார்.
படங்கள்;
தினேஷ் வீரக்கொடி, தவிசாளர், யூனியன் வங்கி
தில்ஷான் ரொட்ரிகோ, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

