இரவு பிரித் ஓதல் மற்றும் இதர சமய அனுஷ்டானங்களுடன் கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளது
Photo captions
- படம் – யூனியன் வங்கியின் 25 வருட பூர்த்தியை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய வழிபாடுகள் நிகழ்வின் சில காட்சிகளை காணலாம்.
யூனியன் வங்கி இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை முன்னெடுப்பதில் 25 வருட கால பூர்த்தியை கொண்டாடுகின்றது. இதனைக் குறிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க யூனியன் வங்கி முன்வந்துள்ளது.
1995 ஆம் ஆண்டில் 8ஆவது உள்நாட்டு வங்கியாக யூனியன் வங்கி நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்ட வளர்ச்சி மற்றும் சிறப்புகளை பதிவு செய்துள்ளது. நடைமுறை நிலைமையை சவால்களுக்கு உட்படுத்தல் மற்றும் புதிய முன்னுதாரணங்களை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் யூனியன் வங்கி பிரவேசித்திருந்தது. பெருமளவு வணிக வங்கிகளுடன், சர்வதேச ரீதியில் பிரசன்னத்தைக் கொண்டிருந்த சூழலில் யூனியன் வங்கி பிரவேசித்த மற்றும் செயலாற்றிய சூழ்நிலை சவால்கள் நிறைந்ததாக காணப்பட்டது. இதன் காரணமாக யூனியன் வங்கி தனக்கென பிரத்தியேகமான அடையாளத்தை உருவாக்கியிருந்தது.
இதன் காரணமாக யூனியன் வங்கி சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை துறையில் வாய்ப்புகளை இனங்கண்டிருந்தது. இந்த துறை பெருமளவில் வங்கிகளின் ஈடுபாட்டை கொண்டிருக்காததுடன், தேசிய அபிவிருத்தியில் பிரதான பங்கை வகிக்கும் துறையாகவும் அமைந்திருந்தது. சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களின் தெரிவுக்குரிய வங்கியாக அர்ப்பணிப்புடனான சேவையை வழங்கி வந்துள்ளதுடன், தேசிய அபிவிருத்தியுடன் ஒன்றிணைந்த நிகழ்ச்சி நிரலுக்கமைய, சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களின் நிலைபேறான வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கியுள்ளது. துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தொழில்முயற்சியாண்மை வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பை யூனியன் வங்கி வழங்கியுள்ளது. இதனூடாக, இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் தொழில்முயற்சி ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளதுடன், சமூகங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவற்றின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் பங்களிப்பு வழங்கியுள்ளதுடன், குறைந்தளவு உதவிகளை பெறும் துறைகளை ஊக்குவித்து, வலுச்சேர்க்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளினூடாக, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பெருமளவு பங்காற்றிய வண்ணமுள்ளது.
உலகின் பாரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ள TPG, 117 மில்லியன் அமெரிக்க டொலர்களை யூனியன் வங்கியில் 2014 ஆம் ஆண்டில் முதலீடு செய்திருந்தது. இதனூடாக வங்கியின் மொத்த பங்குகளில் 70% ஐ கொள்வனவு செய்திருந்தது. இலங்கையின் வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் வெளிநாட்டு நேரடி முதலீடாக இது அமைந்திருந்தது. யூனியன் வங்கியின் புதிய வளர்ச்சிப் பயணமாக இது அமைந்திருந்தது. நிதி உறுதிப்பாட்டுடனான உறுதியான அடித்தளத்தைக் கொண்டும் சர்வதேச ஆற்றலுடன் யூனியன் வங்கி தற்போது முழுமையான சேவைகளை வழங்கும் வணிக வங்கியாக அமைந்துள்ளது. தனிநபர்களுக்கு, தொழில் முயற்சியாளர்களுக்கு மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு நிதிசார் வலுவூட்டல்களை மேற்கொள்ளும் வகையில் பரிபூரண தீர்வுகளையும் சேவைகளையும் வழங்கி வருகின்றது. சிறிய, நடுத்தரளவு தொழிற்துறையை வலுவூட்டி உதவுவதில் வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்துவதுடன், இந்த பிரிவுக்கு வலுச்சேர்ப்பதற்காக மாற்றியமைக்கப்பட்ட சேவை பங்குகளையும் கொண்டுள்ளது.
மூலதன வழங்கலை தொடர்ந்து, துரித வளர்ச்சி மற்றும் புத்தாக்கங்கள் மற்றும் அபிவிருத்திகளை தமது தீர்வுகளில் சேர்ப்பது, மனிதவளங்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவை வழங்கல் தொடர்பில் வங்கி கவனம் செலுத்தியிருந்தது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட வங்கியியல் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பது வங்கியின் நோக்கமாக அமைந்திருந்தது. நாடளாவிய ரீதியில் காணப்படும் 67 கிளைகளினூடாகவும், பரந்தளவு ATM வலையமைப்பு மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவைகளினூடாகவும் பெருமளவு வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் வங்கி கவனம் செலுத்துகின்றது.
யூனியன் வங்கியின் 25 வருட பூர்த்தி தொடர்பில், வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”யூனியன் வங்கியின் இந்த முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை எய்தியுள்ளதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பான நடவடிக்கையினூடாக, வங்கியின் வெற்றிகரமான செயற்பாடு தங்கியுள்ளது. வங்கியின் செயற்பாடுகள் விரிவாக்கத்துடன், எமது அணி 1200 க்கும் அதிகமான ஊழியர்களை கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது. யூனியன் வங்கியின் எதிர்கால வெற்றிகரமான செயற்பாட்டை கட்டியெழுப்புவதில் இவர்கள் தூண்களாக அமைந்திருப்பார்கள். வருடம் முழுவதிலும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த வருடபூர்த்தியை குறிக்கும் நிகழ்வுகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். அண்மையில் சமய அனுஷ்டானங்களுடன் இது ஆரமப்மாகியிருந்தது. யூனியன் வங்கியின் எதிர்காலம் என்பது விறுவிறுப்பானதாக அமைந்திருக்கும் என்பதுடன், வங்கியின் எதிர்கால வளர்ச்சியினூடாக பெருமளவு அனுகூலங்களை அனுபவிக்க எம்முடன் இணைந்து கொள்ளுமாறு சகல பங்காளர்களையும் அழைக்கின்றேன்.” என்றார்.
யூனியன் வங்கியின் 25 வருட பூர்த்தியை குறிக்கும் வைபவத்தின் முதல் அங்கம் யூனியன் வங்கியின் தலைமையகத்தில் இரவு பிரித் ஓதுதல் மற்றும் தானம் வழங்கும் நிகழ்வுடன் ஆரம்பமானது. வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரஜித் விக்ரமசிங்கவுடன் தலைமைத்துவ அணி, சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் சகல கிளைகளின் ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தார் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த பிரித் ஓதுதலை தொடர்ந்து, மூன்று மதங்களையும் குறிக்கும் விசேட சமய வழிபாடுகளும் இடம்பெற்றன. இதிலும் வங்கியின் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். யூனியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி இந்த சமய வழிபாடுகள் இடம்பெற்றன. வங்கியின் 25 வருட பூர்த்தியை குறிக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விசேட நிகழ்வுகள் மற்றும் சமூகத்துக்கு பங்களிப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் போன்றன வருடம் முழுவதிலும் முன்னெடுக்கப்படும்.
TPG பற்றி
TPG என்பது 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சர்வதேச தனியார் முதலீட்டு நிறுவனமாகும். தனது நிர்வாகத்தின் கீழ் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை கொண்டுள்ளதுடன், சென் பிரான்சிஸ்கோ, ஃபோர்ட் வோர்த், ஒஸ்டின், பீஜிங், ஹொங் கொங், ஹவுஸ்டன், லண்டன், லக்சம்பேர்க், மெல்பேர்ன், மொஸ்கோ, மும்பை, நியுயோர்க், சவோ போலோ, சியொல் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அலுவலகங்களையும் கொண்டுள்ளது. TPG ஆசியாவில் 1994 ஆம் ஆண்டு முதல் பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், தற்போது ஆசியாவில் கவனம் செலுத்தப்படும் ஏழாவது நிதியத்தில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது, சர்வதேச பொது மற்றும் தனியார் முதலீடுகளில் TPG ஆழமான அனுபவத்தை கொண்டுள்ளதுடன், திட்டமிடப்பட்ட கொள்முதல்கள், மீள்மூலதனமிடல்கள், சுழற்சிகள், வளர்ச்சி முதலீடுகள், இணை நிறுவனங்கள் மற்றும் மீள்கட்டமைப்புகளினூடாக இவை மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனத்தின் முதலீடுகள் நிதிச் சேவைகள், பிரயாணம் மற்றும் களியாட்டல், தொழில்நுட்பம், வலு, தொழிற்துறை, விற்பனை, நுகர்வோர், ரியல் எஸ்டேட், ஊடகம் மற்றும் தொடர்பாடல்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு போன்ற துறைகளில் காணப்படுகின்றன.

