சமூகத்துக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் தனது கூட்டாண்மை கொள்கையின் பிரகாரம், Covid-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் வகையிலான செயற்பாடுகளை யூனியன் வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது.
மத்திய கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட சமூகத்தாரை நிதித் தாக்கங்களிலிருந்து மீள்வதற்காக 2020 மார்ச் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நிதிசார் நிவாரண திட்டத்தை உடனடியாக அமுல்ப்படுத்துவதற்கு வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதன் பிரகாரம் மார்ச்/ஏப்ரல் மாதங்களுக்கான கடன் அட்டை கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான கால எல்லையை நீடிப்பது தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டிருந்ததுடன், கடன்கள் மற்றும் குத்தகைகள் போன்ற பிரத்தியேக கடன் வசதிகளை மீளச் செலுத்தும் கால எல்லையையும் நீடித்திருந்தது.
வங்கியின் கூட்டாண்மை, சிறிய,நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் சில்லறை வங்கியியல் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த நிதிசார் நிவாரண திட்டத்தில், 1 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த பிரத்தியேக கடன்களுக்கு மூன்று மாத காலம் வரை ஒத்தி வைக்கப்பட்ட கடன் மீளச் செலுத்தல் சலுகை வழங்கப்படுகின்றது. ரூ. 50000 வரையான கடன் அட்டை கொடுக்கல் வாங்கல்களுக்காக ஆகக்கூடிய பொருத்தமான வருடாந்த வட்டி வீதம் 15% ஆக குறைக்கப்பட்டிருந்தது. மீளச் செலுத்த வேண்டிய ஆகக்குறைந்த தொகையும் 4% இலிருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2020 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு கடன் அட்டை மற்றும் கடன்களுக்கான காலம் கடந்த கொடுப்பனவுக்காக அறவிடப்படும் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஏப்ரல் மாதம் முழுவதிலும் Pickme.lk உடன் கைகோர்த்து வங்கியின் கடன் அட்டைதாரர்கள் கொள்வனவு செய்திருந்த அத்தியாவசிய பொருட்களுக்கு 20% சேமிப்பையும் யூனியன் வங்கி வழங்கியிருந்தது.
சுயதொழிலில் ஈடுபடுவோர், வெளிநாட்டு நாணயத்தில் வருமானமீட்டுவோர் (தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள்), சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் (விவசாயம், உற்பத்தி, சேவைகள், நிர்மாணம் மற்றும் வர்த்தக துறைகள்) மற்றும் சுற்றுலாத்துறை, நேரடி மற்றும் மறைமுகமாக ஏற்றுமதியுடன் தொடர்புடைய வியாபாரத்தில் ஈடுபடும் கூட்டாண்மை நிறுவனங்கள், ஆடைத் தொழிற்துறை நிறுவனங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சரக்கு கையாளல் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு தாம் பெற்றுக் கொண்ட கடன்களின் முதல் மற்றும் வட்டியை மீளச் செலுத்துவதற்கு 6 மாதங்கள் வரை சலுகைக் காலத்தை யூனியன் வங்கி வழங்கியுள்ளது. மேலும், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள், சிறியளவிலான வர்த்தகர்கள் போன்ற துறையினருக்கு உடனடியாக நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில், காசோலை மீளத்திரும்பலுக்கான கட்டணம் அறவீடு மற்றும் காசோலை கொடுப்பனவை நிறுத்தல் போன்றவற்றுக்கான கட்டணங்கள் அறவிடுவதை 2020 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை இடைநிறுத்தியுள்ளது. ரூ. 500000 க்கு குறைவான பெறுமதிகளுக்கு வழங்கப்பட்ட காசோலைகளுக்கான செல்லுபடியாகும் காலம் மே மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், 2020 ஏப்ரல் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்க நகை அடகுச் சேவைக்கான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமது வியாபாரங்களை மீளமைத்துக் கொள்வதற்காக குறைந்த வட்டியில் தொழிற்படும் மூலதன கடனை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வாடிக்கையாளர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு யூனியன் வங்கி முன்வந்துள்ளதுடன், இதனூடாக அந்நிறுவனங்களுக்கு உரிய காலப்பகுதியில் சம்பளங்களை வழங்குதல், பண அனுப்புகைகளை மேற்கொள்ளல் மற்றும் சர்வதேச வியாபார கொடுக்கல்வாங்கல்களை முன்னெடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ள உதவியாக அமைந்துள்ளது. சவால்கள் நிறைந்த இந்த பொருளாதார சூழலிலும் வியாபாரங்களுக்கும், வர்த்தக உரிமையாளர்களுக்கும் உதவிகளை பெற்றுக் கொடுக்க யூனியன் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது.
இந்த நிவாரண செயற்பாடுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”நாட்டில் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்நாட்டு அதிகார அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் நாம் மிகவும் திருப்தியடைகின்றோம். எமது பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளை பின்பற்றி செயலாற்றுவது மற்றும் Covid-19 இனால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் பொருளாதார ரீதியிலான மீட்சிக்கு பங்களிப்பு வழங்குகின்றோம். அத்தியாவசிய சேவை வழங்குநர் எனும் வகையில், இந்த உறுதியற்ற காலப்பகுதியில் எமது சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதை நாம் உறுதி செய்துள்ளதுடன், எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவமளித்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். எமது வங்கிச் சூழலில் தகுந்த முற்காப்பு நடவடிக்கைகளை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். தூய்மை மற்றும் தொற்றுநீக்கல் செயற்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. எமது கிளை முகாமையாளர்கள் மற்றும் உறவு முகாமையாளர்கள் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, வழங்கப்படும் நிவாரண வசதிகள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் பற்றிய தெளிவுபடுத்தல்கள் குறித்த விளக்கங்களை வழங்குகின்றனர். நாம் ஒன்றிணைந்து இந்த சவாலை வெற்றி கொள்வோம் என்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த சவால் நிறைந்த காலப்பகுதியில் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு யூனியன் வங்கி அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.” என்றார்.
Covid-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது நிலவும் ஊரடங்குசட்ட சூழலில், வாடிக்கையாளர்களுக்கு இடைவிடாத வங்கிச் சேவைகளை தமது கிளைகளினூடாக யூனியன் வங்கி வழங்குகின்றது. வங்கிக் கிளைகளிலும், வெளியிடப்பகுதிகளிலும் காணப்படும் ATM இயந்திரங்கள் மற்றும் LankaPay வலையமைப்பினூடாக இணைக்கப்பட்டுள்ள 4500 க்கும் அதிகமான ATM களினூடாக வாடிக்கையாளர்களக்கு அவசர நிலைகளின் போது பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். வங்கியின் ஒன்லைன் கட்டமைப்பினூடாகவும் மொபைல் வங்கிச் சேவை app ஊடாகவும் வாடிக்கையாளர்களுக்கு பெருமளவான கொடுக்கல் வாங்கல்களை பாதுகாப்பான முறையில் வீடுகளிலிருந்தவாறே முன்னெடுக்க முடியும்.
யூனியன் வங்கியின் இணையத்தளமான www.unionb.com மற்றும் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமான 011 5800800 ஆகியன வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க எவ்வேளையிலும் செயலில் இருக்கும். யூனியன் வங்கியின் பிரத்தியேகமான Covid-19 நிவாரண தகவல்கள் அடங்கிய பகுதி 2020 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் செயலிலுள்ளதுடன், நிதி நிவாரண சேவையை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் வங்கியின் வாடிக்கையாளர்கள் தமது கிளைக்கு/சம்பந்தப்பட்ட முகாமையாளருக்கு மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக எழுத்து மூலமாக அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.unionb.com/covid-19-relief/ எனும் பக்கத்திலிருந்து மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

