2023 முதல் காலாண்டில், இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் மீட்சியை அவதானிக்க முடிந்திருந்தது. குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) இலங்கைக்கு கிடைத்திருந்ததைத் தொடர்ந்து இந்த மீட்சியான போக்கை அவதானிக்க முடிந்தது. நாணயமாற்று வீதங்களில் இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வு, பணவீக்கத்தில் குறைவான வளர்ச்சி, திறைசேரி உண்டியல் கட்டணங்களில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி மற்றும் தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வுகள் போன்ற செயற்பாடுகளினூடாக, வங்கித் துறைக்கு தமது வியாபார நோக்கத்தை மீளமைத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. பெருமளவு மூலதனவாக்கத்தினூடாக வங்கியியல் துறையின் உறுதித் தன்மையின் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் மீள வலியுறுத்தியிருந்த காலப்பகுதியில், யூனியன் வங்கி உறுதியான மூலதன இருப்புடன், ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்ந்த ஸ்தானத்தில் திகழ்ந்திருந்தது.
2023 இன் முதல் காலாண்டு பகுதியில் யூனியன் வங்கி ஒட்டுமொத்த வருமான அதிகரிப்பாக ரூ. 2,064 மில்லியனை பதிவு செய்திருந்தது. இது முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 25 சதவீத அதிகரிப்பாகும். வங்கியினால் தனது வியாபாரச் செயற்பாடுகளை அவதானமாக நிர்வகித்திருந்தமையுடன், புதிய வியாபார வாய்ப்புகளை தெரிவு செய்கையில் அவதானமான செயற்பாடு போன்றவற்றினூடாக இந்த உயர்ந்த பிரதான வங்கியியல் வினைத்திறனை பதிவு செய்ய முடிந்திருந்தது.
கடன் பிரிவு மற்றும் திறைசேரி சொத்துக்களின் மீள்விலையிடலினூடாக பெறப்பட்ட மேம்படுத்தப்பட்ட பெறுபேறுகளால், வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII) ரூ. 1,622 மில்லியன் எனும் பெறுமதிக்கு 49 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தமையின் காரணமாக, வங்கியின் வருமான அதிகரிப்பு பதிவாகியிருந்தது. திறைசேரியினால் அரசாங்க முறிகள் பிரிவு அவதானமான முறையில் நிர்வகிக்கப்பட்டிருந்ததுடன், வங்கிகளுக்கிடையிலான சந்தை வாய்ப்புகளின் அனுகூலங்களையும் எய்தியிருந்தது. உரிய காலத்தில் சொத்துகள் புத்தகத்தின் விலைமறுமதிப்பீட்டுடன், வட்டிச் செலவீனங்களை கவனமாக நிர்வகித்திருந்தமையினூடாக தேறிய வட்டி எல்லைப் பெறுமதி (NIM) 172bps இனால் அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. தேறிய தரகு மற்றும் கூலி வருமானமும் 26 சதவீதத்தினால் அதிகரித்து ரூ. 321 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், வைப்புகளுடன் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் கடன்அட்டைக் கட்டணங்கள் போன்றன பங்களிப்புச் செலுத்தியிருந்தன.
ரூபாயின் மதிப்பிறக்கம் குறிப்பிடத்தக்களவில் பதிவாகியிருந்த நிலையில், அந்நியச் செலாவணி வீதங்களில் அதிகரிப்பு பதிவாகியிருந்த முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலாண்டில், ரூபாயின் மதிப்பு அதிகரிப்பில், வங்கியின் இதர தொழிற்பாட்டு வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பெறுமதி 97 சதவீதத்தினால் குறைந்து ரூ. 9.2 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதனால் வங்கியின் இலாபகரத்தன்மையிலும் பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
மீட்சி மற்றும் திரண்ட செயற்பாடுகள் போன்றவற்றில் காணப்பட்ட தொடர்ச்சியாக சவால்கள் காரணமாக, வங்கி தொடர்ந்தும் உயர்ந்த மதிப்பிறக்கப் பெறுமதிகளை பேண நிர்ப்பந்தித்திருந்தது. இதுவும், வங்கியின் இலாபகரத்தன்மையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் பெறுபேறாக, இக்காலப் பகுதிக்கான மதிப்பிறக்கக் கட்டணம் ரூ. 450 மில்லியனாக காணப்பட்டது. இது முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 56 சதவீத அதிகரிப்பாகும்.
கடுமையான செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பணவீக்கத்தில் அதிகரிப்பு காணப்பட்டமையால், மொத்த தொழிற்பாட்டு செலவுகள் 23 சதவீதத்தால் அதிகரித்து ரூ. 1,213 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, தொழிற்பாட்டு செயற்பாடுகளின் பெறுபெறுகள் ரூ. 401 மில்லியனாக காணப்பட்டது.
துணை நிறுவனங்களின் பங்கு ஒதுக்கீடுகள் அடங்கலாக, வங்கியின் வட்டிக்கு முந்திய இலாபம் ரூ. 422 மில்லியனாக காணப்பட்டது. மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டில், வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 145 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், கூட்டாண்மை வரி, VAT மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி போன்றவற்றின் அதிகரிப்பினால், நடப்பு ஆண்டின் இலாபத்தில் பெருமளவு தாக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
மார்ச் 31 ஆம் திகதியன்று வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 118,800 மில்லியனாக காணப்பட்டது. சந்தையில் காணப்படும் குறைந்தளவு வாய்ப்புகள் மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வைத் தொடர்ந்து, வெளிநாட்டு நாணய கடன்களின் மீள மதிப்பீடு போன்றவற்றினூடாக, வங்கியின் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ. 62,978 மில்லியன் எனும் பெறுமதிக்கு வீழ்ச்சியடைந்திருந்தது. வெளிநாட்டு நாணய வைப்புகளின் விலைக்குறைப்பு மறுவிலையிடலும், வங்கியின் பொறுப்பு பக்கத்தில் சரிவை ஏற்படுத்தியிருந்தது. காலாண்டில் வங்கி இலங்கை ரூபாய் மற்றும் வெளிநாட்டு நாணயம் போன்றவற்றின் ஆரோக்கியமான திரள்வு நிலையை பேணியிருந்தது. காலாண்டின் இறுதியின் வங்கியின் வைப்புகள் ரூ. 90,250 மில்லியனாக அமைந்திருந்தது. இதில், திட்டமிடப்பட்ட வைப்பு பரம்பல் செயற்பாடுகள் மற்றும் தந்திரோபாய ரீதியில் நிர்வகிக்கப்பட்ட எல்லைப் பெறுமதிகள் போன்றன பங்களிப்பு செய்திருந்தன. CASA விகிதம் 25.5% ஆக உயர்ந்திருந்தது. 2023 மார்ச் 31 ஆம் திகதியன்று, வங்கியின் மொத்த மூலதன விகிதம் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை விட உயர்ந்த நிலையில், 18.55% ஆக காணப்பட்டது.
யூனியன் பாங்க் ஒஃவ் கொழும்பு பிஎல்சி, UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட யூனியன் வங்கிக் குழுமம், 2023 மார்ச் 31 ஆம் திகதியன்று, வரிகளுக்கும் முன்னரான இலாபமாக ரூ. 496 மில்லியனையும், வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 174 மில்லியனையும் பதிவு செய்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துகளின் பெறுமதி ரூ. 125,803 மில்லியனாகும். வங்கியின் பங்குப் பெறுமதி 94% ஐ விட உயர்வானதாக அமைந்திருந்தது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், கூட்டாண்மை அறிக்கையிடலில் வெளிப்படைத் தன்மைக்காக ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவினால் (TISL) சிறந்த 100 பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்தது. 2022 ஆம் ஆண்டில் 100 ஸ்தானங்களில் 14 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், மோசடி தவிர்ப்பு மற்றும் உள்ளக நிதி அறிக்கையிடல் போன்றவற்றில் பெருமளவு வெளிப்படைத்தன்மைக்காக முழுமையான நிறுவனசார் வெளிப்படுத்தல் தரப்படுத்தலையும் பெற்றிருந்தது.

