
பிரதி தவிசாளர் சப்ரி கவுஸ்

சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளர் ட்ரவீன் பெர்னான்டோபுள்ளே
யூனியன் வங்கியின் பிரதித் தவிசாளராக சப்ரி கவுஸ் மற்றும் சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளராக ட்ரவீன் பெர்னான்டோபுள்ளே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது. 2020 நவம்பர் 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக கவுஸ் இணைந்து கொண்டார். இவர் தற்போது வங்கியின் Related Party Transactions Review Committee (RPTRC) இன் தவிசாளராக செயலாற்றுகின்றார். அத்துடன் Board Credit Committee (BCC), மனித வளங்கள் மற்றும் சம்பள குழு (HRRC) மற்றும் Nomination Committee (NC) ஆகியவற்றின் உறுப்பினராகவும் திகழ்கின்றார்.
வங்கியியல் துறையில் இவர் 27 வருட காலம் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். உள்நாட்டிலும் வெளிநாடுகளையும் சேர்ந்த முன்னணி சர்வதேச வங்கிகளில் இவர் பணியாற்றியுள்ளார். இதில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி, ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி மற்றும் சவுதி அரேபியாவின் அல் ராஜி பாங்கிங் அன்ட் இன்வெஸ்ட்மன்ட் கோர்பரேஷன் ஆகியன அடங்கியுள்ளன. இவற்றில் நுகர்வோர் வங்கியியல், அதனைச் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், தெரிவு செய்யப்பட்ட சந்தைகளில் குறித்த வங்கிகளை முன்னோடிகளாக திகழச் செய்வதற்கும் பங்காற்றியிருந்தார். 1991 ஆம் ஆண்டு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உடன் இணைந்து கொண்ட இவர், இலங்கையில் முதலாவது கூட்டாண்மை அட்டையை அறிமுகம் செய்வதில் பங்களிப்பு வழங்கியிருந்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளில் அட்டைகள் விநியோகம் மற்றும் வியாபாரக் கையகப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயலாற்றியிருந்தார். ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியின் சில்லறை வங்கியியல் பிரிவின் தலைமை அதிகாரியாக இவர் செயலாற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து லென் பிராந்தியத்துக்கான நுகர்வோர் வங்கியியல் செயற்பாடுகளுக்கான பிராந்திய தலைமை அதிகாரியாக பணியாற்றியிருந்ததுடன், கிரின்ட்லேஸ் வங்கியின் வியாபாரத்தை வெற்றிகரமாக கையகப்படுத்தியிருந்த செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கியிருந்தார். மலேசியாவின் அல் ராஜி வங்கியின் நுகர்வோர் வங்கியியல் பிரிவின் பணிப்பாளராக இவர் பணியாற்றியிருந்தார். மலேசிய சந்தையில் இந்த வங்கி பிரவேசித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் கிளை வலையமைப்பை விஸ்தரிப்பதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார். இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் முன்னாள் பணிப்பாளராக கவுஸ் பணியாற்றியிருந்தார். இவர், அவுஸ்திரேலியாவின் வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகத்திலிருந்து வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டத்தைப் பெற்றுள்ளார். ஐக்கிய இராஜ்ஜியத்தின் லண்டன் பிஸ்னஸ் ஸ்கூல் மற்றும் Templeton, Oxford ஆகியவற்றின் தலைமைத்துவ கற்கைகளை இவர் தொடர்ந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக பெர்னான்டோபுள்ளே இணைந்து கொண்டார். இவர் வங்கியின் RPTRC, BCC, HRRC மற்றும் NC ஆகியவற்றின் குழு உறுப்பினராக செயலாற்றுகின்றார். 40 வருட காலத்துக்கு மேலாக நிதிச் சேவைகள் துறையில் அனுபவத்தைக் கொண்ட வங்கியாளராக இவர் திகழ்கின்றார். யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக, DFCC குழும பிரதம இடர் அதிகாரி/நிறைவேற்று உப தலைவர் – இடர் அதிகாரியாகவும், இலங்கை வங்கியின் பிரதம இடர் அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார். HSBC ஸ்ரீ லங்காவின் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாக இவர் 30 வருடமாக பணியாற்றியதுடன், சர்வதேச வங்கியியல் மற்றும் இடர் முகாமைத்துவ விசேட செயற்பாடுகள் தொடர்பில் போதியளவு அறிவை இவர் பெற்றுள்ளார். இடர் முகாமைத்துவம், வெளிநாட்டு பரிமாற்றம் மற்றும் திறைசேரி, சர்வதேச வர்த்தகம், கூட்டாண்மை வங்கியியல் மற்றும் நுகர்வோர் செயற்பாடுகள் போன்ற பல செயற்பாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்கியுள்ளார்.
AMW கெப்பிட்டல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் (Al Futtaim Group உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனம்) தவிசாளராக பெர்னான்டோபுள்ளே திகழ்வதுடன், ஜோசப் ஃபிரேசர் ஞாபக வைத்தியசாலையின் காப்பாளர் சபையின் அங்கத்தவராகவும் திகழ்கின்றார். கொன்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட்டின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் இவர் பணியாற்றுகின்றார். தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளராகவும், இலங்கை வங்கியியலாளர் பட்டய கல்வியகத்தின் முன்னாள் தலைவராகவும் (இலங்கை கிளை) மற்றும் இலங்கை வங்கியியல் இடர் நிபுணர்கள் சம்மேளனத்தின் ஸ்தாபக அங்கத்தவர்/முன்னாள் உப தலைவராகவும் செயலாற்றியுள்ளார். Imperial College, University of London (UOL) இலிருந்து இளமாணிப் பட்டத்தை (கணிதம்) பெர்னான்டோபுள்ளே பெற்றுள்ளதுடன், London School of Economics, UOL இலிருந்து புள்ளிவிவரவியலுக்கான முதுமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். லண்டன் வங்கியியலாளர் பட்டய கல்வியகத்தின் அங்கத்தவராகவும் திகழ்கின்றார்.
இந்த இரு நியமனங்களையும் பணிப்பாளர் சபை வரவேற்றுள்ளதுடன், யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையுடன் இணைந்து கொண்டதன் பின்னர் கவுஸ் மற்றும் பெர்னான்டோபுள்ளே ஆகியோரினால் பெருமளவு உதவி, வழிகாட்டல் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகளவு ஆலோசனைகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றது. இந்த நியமனங்கள் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையின் வலிமையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதுடன், வங்கியை வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கு பெருமளவு பெறுமதியையும் வலிமையையும் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் பிரதி தவிசாளரும்/சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளருமான பிரியந்த பெர்னான்டோ வங்கிக்காக ஆற்றியிருந்த பெறுமதி வாய்ந்த பங்களிப்புக்காக பணிப்பாளர் சபை நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. 2020 நவம்பர் 1ஆம் திகதி முதல் வங்கியின் பணிப்பாளர் சபையிலிருந்து பெர்னான்டோ ஓய்வு பெற்றுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் நிர்ணயத்தின் பிரகாரம் ஒன்பது வருட காலம் இந்தப் பதவியில் சேவையாற்றியிருந்ததைத் தொடர்ந்து, அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

