2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. நாட்டில் கொவிட்-19 தொற்றுப் பரவல் மார்ச் மாதம் முதல் தாக்கத்தை ஏற்படுத்தி சவால்கள் நிறைந்த சூழலை ஏற்படுத்தியிருந்த போதிலும், யூனியன் வங்கி சிறந்த நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.
2020 ஏப்ரல் மாதம் முதல், இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட வாடிக்கையாளர் நிதி நிவாரணத் திட்டங்களை வங்கி வழங்கியிருந்தது. குறிப்பாக பாதிப்புகளுக்கு முகங்கொடுத்திருந்த கூட்டாண்மை, சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் சிறியளவிலான வங்கியியல் பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சலுகைகளை வழங்கியிருந்தது.
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியினுள், வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்ட கடன்களின் மீதான மூலதனம் மற்றும் வட்டியை மீளச் செலுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்த கடன் மீளச் செலுத்தல் சலுகையில் ரூ. 22.2 பில்லியன் பெறுமதியான தொகையை வங்கி அனுமதித்திருந்தது. இரு மாதங்கள் வரை ரூ. 40 பில்லியன் வரையான கொடுப்பனவு நீடிப்புகளுடனான கடன்வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. மேலும், இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கு அப்பாலான, வங்கியின் உள்ளக கடன் கொள்கை வழிமுறைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெருமளவான வாடிக்கையாளர்களுக்கு கடன் மீளச் செலுத்தல் சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. சலுகைக் காலப்பகுதியில் கடன்கள் மற்றும் குத்தகைகள், மேலதிகப் பற்று, அடகு மற்றும் டிரேட் ஃபினான்ஸ் வசதிகள் போன்றன அடங்கியுள்ளன. மேலும், ஈடுபாடற்ற கடன்பெறுநர்களின் கோரிக்கைகளின் பிரகாரம், நிவாரணத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய மீளமைப்புத் திட்டங்கள், திரண்ட வட்டியின் மீதான விலக்கழிப்புகள் மற்றும் மீளத்திரும்பல்கள் மீது தக்கவைப்புகள் போன்றன அடங்கியிருந்தன.
இரண்டாம் காலாண்டில் ஏப்ரல் முதல் மே மாதம் நடுப்பகுதி வரை நிலவிய முடக்க நிலை காரணமாக யூனியன் வங்கியின் பிரதான வங்கியியல் செயற்பாடுகள் சுருக்கமடைந்திருந்தன.
சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலில், சராசரி நிதி வழங்கல் விகிதம் (AWPLR)என்பது சுமார் 250 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்திருந்தது. திறைசேரி பத்திரங்களும் வீழ்ச்சியான போக்கைப் பதிவு செய்திருந்தன. கடன் அட்டைகள் அடங்கலாக, பல்வேறு கடன் திட்டங்களுக்கான வட்டி வீதங்களை இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் வங்கி பெருமளவு குறைத்திருந்தது. சௌபாக்கியா கொவிட்-19 கடன் வசதித் திட்டம் அடங்கலாக, சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு தொழிற்படு மூலதனத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக சகாய விலையில் கடன் வசதிகளை யூனியன் வங்கி வழங்கியிருந்தது.
வங்கியில் ஆரோக்கியமான திரள்வு நிலையை பேணும் வகையில், ஊழியர் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பு போன்றன முக்கியத்துவம் பெற்றிருந்தன. வங்கியின் பரந்தளவு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு ஏற்பட்டிருந்த கொவிட்-19 தாக்கத்தைக் குறைத்துக் கொள்வதற்காக நிவாரணத் திட்டங்களை பெற்றுக் கொடுப்பதிலும் வங்கியின் நிர்வாகம் கவனம் செலுத்தியிருந்தது. 2020 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதியில், சராசரி நிலையான வைப்புகள் என்பது நிலையானதாக காணப்பட்டதுடன், சராசரி பெறுமதி CASA என்பது ரூ. 21,444 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 13% அதிகரிப்பாகும். ஆரோக்கியமான CASA உட்பாய்ச்சலை பேணுவது என்பதில் சிறியளவு, கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு வங்கியியல் பிரிவுகளினால் முன்னெடுக்கப்பட்டிருந்த கையகப்படுத்தல் மூலோபாயங்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன. அறிக்கையிடல் காலப்பகுதியின் நிறைவில், வங்கியின் CASA விகிதம் என்பது 25.8% ஆக காணப்பட்டது.
அதன் பிரகாரம், வங்கியின் நிகர வட்டி எல்லைப் பெறுமதி என்பது மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் 3.4% இலிருந்து 3.2% ஆகக் குறைந்தது. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம் கடன் அட்டை காலம் தாழ்த்திய கொடுப்பனவுகளுக்கான கட்டணம் விலக்கழிப்பு மற்றும் இதர கட்டண விலக்கழிப்பு போன்றன செப்டெம்பர் மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தொற்றுப் பரவல் மற்றும் வியாபார செயற்பாடுகள் மந்த கதியை எய்தியிருந்தமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளதுடன், வங்கியின் ஒட்டுமொத்த கட்டண வருமானத்தில் 26% சரிவை ஏற்படுத்தியிருந்தது.
வங்கியின் திறைசேரி குறிப்பிடத்தக்களவு மூலதன வருமதிகள் பிரிவில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. வங்கியின் ஏனைய தொழிற்படு வருமானப் பிரிவு என்பது வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற வீக்கம் காணப்பட்ட போதிலும் 6% இனால் அதிகரித்திருந்தது.
சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும் வங்கியின் தொழிற்படு மூலதனம் ரூ. 2951 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 2% அதிகரிப்பாகும். வங்கியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த பரந்தளவு செலவுக் கட்டுப்பாட்டுச் செயன்முறைகளினூடாக, மொத்த தொழிற்படு செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இக்காலப்பகுதிக்கான மொத்த தொழிற்படு செலவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% இனால் குறைந்து ரூ. 1914 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. அதுபோன்று, வங்கியின் இலாபத்துக்கு முன்னரான ஒதுக்கங்கள் ரூ. 1036 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 12% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. வங்கியின் கடன் இழப்புகள் குறைவாகக் காணப்பட்டதுடன், இக்காலப்பகுதியில் வங்கி குறிப்பிடத்தக்களவு ஒதுக்கங்களைப் பேணியிருந்ததுடன், மதிப்பிறக்க கட்டணங்களில் 102% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
சவால்கள் நிறைந்த பாரிய-பொருளாதாரப் பின்புலத்தில், தொழிற்பாட்டு செயற்பாடுகளில் வங்கி குறைந்தளவு பெறுபேறுகளைப் பதிவு செய்து, ரூ. 755.2 மில்லியனைப் பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4% சரிவாகும். வங்கியின் துணை நிறுவனங்களுக்கான தொழிற்படு சூழலில், UB பினான்ஸ் மற்றும் NAMAL ஆகியன சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தன. வரி வீதங்களில் குறைப்பு மற்றும் ஒதுக்கங்களை கவனமாகக் கையாண்டிருந்தமை போன்றவற்றினூடாகவும், துணை நிறுவனங்களின் மீது வங்கி கொண்டிருந்த உரிமையாண்மைகளின் பங்கினூடாகவும் வரிக்கு பிந்திய இலாபத்தை 6% இனால் அதிகரித்துக் கொள்ள முடிந்தது.
ஆண்டின் மார்ச் மாதம் முதல் பாரியளவு பொருளாதாரச் சூழலில் நிலவிய வெளியக அழுத்தங்கள் மற்றும் தொடர்ச்சியான மதிப்பிறக்கம் காரணமாக, தேறிய NPL விகிதம் 5.3% ஆக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி 5.03% ஆக காணப்பட்டது.
வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ஜுன் 30 ஆம் திகதியன்று ரூ. 128,643 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. வங்கியின் கடன்கள் மற்றும் கிடைப்பனவுகள் போன்றன ரூ. 75,997 மில்லியனாகப் பதிவாகியிருந்ததுடன், வைப்புகள் இருப்பு ரூ. 79,779 மில்லியனாகப் பதிவாகியிருந்தது. இது 4% அதிகரிப்பாகும்.
வங்கி தொடர்ச்சியாக தனது மூலதனப் போதுமை விகிதத்தைப் பேணியிருந்ததுடன், மொத்த மூலதன விகிதமாக 16.06% ஐ பதிவு செய்திருந்தது.
இரு துணை நிறுவனங்களான பினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் NAMAL ஆகியவற்றைக் கொண்ட வங்கியின் குழுமம், வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 796 மில்லியனைப் பதிவு செய்திருந்தது. குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் என்பது, முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3% இனால் குறைந்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 135,724 மில்லியனாகக் காணப்பட்டது. இதில் 95%ஐ வங்கி கொண்டிருந்தது. வங்கி ஆரோக்கியமான பிரதான மூலதன விகிதமான 16.30% ஐ பேணியிருந்தது.
இந்த உறுதியற்ற காலப்பகுதிகளில் தனது சிறியளவிலான, சிறிய, நடுத்தரளவு வியாபாரங்கள் மற்றும் கூட்டாண்மை வியாபாரங்களுடன் தொடர்பாடல்களைப் பேணி, அவை எதிர்நோக்கியிருந்த பிரத்தியேகமான வங்கியியல் தேவைகளின் பிரகாரம் தனது தீர்வுகளை மாற்றியமைத்து வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. யூனியன் வங்கி BizDirect கொடுக்கல் வாங்கல் தீர்வு என்பது, கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை வாடிக்கையாளர்களுக்கு அவசியமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தது. அதுபோன்று வங்கியின் ஒன்லைன் வங்கிச் சேவை மற்றும் மொபைல் வங்கிச் சேவை போன்றனவும் வாடிக்கையாளர்களின் கணக்குகள் மற்றும் கடன் அட்டைகளை பாதுகாப்பான முறையில் அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தன. தொற்றுப் பரவல் காணப்பட்ட காலப்பகுதியில் ஒன்லைன் வங்கிச் சேவைக்கு பதிவு செய்யும் செயன்முறை மேலும் இலகுபடுத்தப்பட்டிருந்தது. இதனூடாக, இந்த வங்கி முறைகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
யூனியன் வங்கி கடன் அட்டைகள் தொடர்ந்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீதும் ஒன்லைன் கொள்வனவுகளின் மீது சேமிப்புகளை வழங்கியிருந்தது. நெருக்கடியான காலப்பகுதியில் அட்டைதாரர்களுக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் இது அமைந்திருந்தது.
சுகாதார அதிகார அமைப்புகளின் வழிகாட்டல்களின் பிரகாரம், வங்கி தனது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கிளை வலையமைப்பிலும் தலைமையகத்திலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஏற்படுத்தியிருந்தது. வங்கியின் ATM வலையமைப்பு, ஒன்லைன்/மொபைல் வங்கியியல் கட்டமைப்புகள் மற்றும் 24 மணி நேர அழைப்பு நிலையம் போன்றவற்றினூடாக பாதுகாப்பான வகையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டிருந்தது.
முதல் அரையாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாம் கொவிட்-19 தொற்றுப் பரவல் காணமாக பாதிக்கப்பட்டிருந்த எமது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணத் திட்டங்களை வினைத்திறன் வாய்ந்த முறையில் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தியிருந்தோம். இதற்காக கிளை/பிராந்திய மட்டத்தில் இனங்காணல் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதிலும் நாம் கவனம் செலுத்தியிருந்தோம். வங்கியின் முதல் அரையாண்டு பெறுபேறுகளினூடாக, சவால்கள் நிறைந்த சூழலில் நாம் செயலாற்றியிருந்தமை பிரதிபலிக்கப்பட்டுள்ளது. வெளியக அழுத்தங்கள் காணப்பட்ட போதிலும், வங்கி கொண்டிருந்த உறுதியான திரள்வு மற்றும் மூலதன நிலை போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தருவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது வாடிக்கையாளர்களுக்கு சிறியளவு, கூட்டாண்மை மற்றும் சிறிய, நடுத்தரளவு வியாபார பிரிவுகளில் அவசியமான நிதி நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதுடன், எமது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகின்றோம்.” என்றார்.

