படம்:
யூனியன் வங்கியின் சட்டப் பிரிவின் உதவி பிரதித் தலைவர் சந்தமாலி முனசிங்க, கௌரவிப்பு சான்றிதழை, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நதீஷானி பெரேராவிடமிருந்து பெற்றுக் கொள்கின்றார்.
கூட்டாண்மை அறிக்கையிடலில் சிறப்பை பேணியிருந்தமைக்காக யூனியன் வங்கி, நாட்டிலுள்ள சிறந்த 100 பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிப்பைப் பெற்றிருந்தது. 2022 ஆம் ஆண்டுக்காக, ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நஷனல் ஸ்ரீ லங்காவினால் (TISL) முன்னெடுக்கப்பட்டிருந்த கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பீட்டின் பெறுபேறினூடாக இந்த உயர் கௌரவிப்பு யூனியன் வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த கௌரவிப்பு வழங்கப்பட்ட 100 நிறுவனங்களில் 14 ஆம் இடத்தை யூனியன் வங்கி பெற்றுக் கொண்டதுடன், கூட்டாண்மை அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மையை பேணியிருந்தமைக்காக மொத்தமாக வழங்கப்பட்ட 10 புள்ளிகளில் 8.39 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது. நிறுவனசார் வெளிப்படைத்தன்மையில் முழுமையான வெளிப்படுத்தலைக் கொண்டுள்ளதாகவும், மோசடி தவிர்ப்பு மற்றும் உள்ளக நிதி அறிக்கையிடல் ஆகியவற்றில் பெருமளவு வெளிப்படைத்தன்மையை கொண்டுள்ளதாகவும் தரப்படுத்தப்பட்டிருந்தது.
மோசடி தவிர்ப்பு நிகழ்ச்சிகள், நிறுவனசார் வெளிப்படைத்தன்மை, உள்ளக நிதி அறிக்கையிடல், நாடுகளுக்கிடையிலான அறிக்கையிடல், பாலினம் மற்றும் பாகுபாடற்ற கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் விலைமனுக்கோரல்கள்/ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய கொள்முதல் சார்ந்த அறிக்கையிடல் போன்றவற்றுக்கான TISL வழிகாட்டல்களுக்கமைய, கூட்டாண்மை அறிக்கையிடல் செயன்முறையின் பிரகாரம் நிறுவனங்கள் முன்னெடுத்திருந்த முன்னேற்றகரமான செயற்பாடுகளின் பிரகாரம் இந்த கௌரவிப்பு அமைந்திருந்தது.
வெளிப்படையான கூட்டாண்மை அறிக்கையிடல் மதிப்பாய்வு 2022 என்பது, இலங்கையின் சிறந்த 100 பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மத்தியில் சுயாதீனமான முறையில் TISL இனால் மேற்கொள்ளப்படும் கூட்டாண்மை வெளிப்படுத்தல் தொடர்பான மதிப்பாய்வாக அமைந்துள்ளது. பின்பற்றப்படும் ஆய்வு முறையில், ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நஷனலின் நியம TRAC முறைமை பின்பற்றப்படுகின்றது.

